திருத்தந்தையின் முழக்கம்
நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
“இயேசு துன்பங்களை ஒதுக்கவில்லை; மாறாக, துன்பத்தை ஏற்று, அதனை வாழ்ந்து காட்டுவதில் கைதேர்ந்த ஒரு குடும்பத்தைத் தேர்வு செய்து, அதில் அவர் வாழ்ந்தார். இதன் வழியாகக் குடும்பங்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்தும், எக்காரணத்திற்காக அவைகள் துயருறுகின்றன என்பது குறித்தும் இயேசு நன்கு அறிவார்.”
- சனவரி 03, வத்திக்கானின் திருப்பயணிகளுக்கான செய்தி
“விசுவாசப் பயணத்தில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், ஏனைய கிறிஸ்தவச் சபைகளுடனும், கிறிஸ்தவச் சமூகங்களுடனும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.”
- சனவரி 02, கத்தோலிக்கத் திரு அவைக்கான செய்தி
“மரியா, இறைவனின் தாய் என்பது இறைவனின் என்றுமுள்ள உடன்படிக்கையை நம்முடன் ஒப்புக்கொள்ளும் ஓர் எளிய சொற்றொடர். இது விசுவாசத்தின் கோட்பாடு மட்டுமல்ல; மாறாக, என்றென்றும் ‘மனிதரில் கடவுள், கடவுளில் மனிதர்’ என்பதன் நம்பிக்கையின் கோட்பாடாகவும் இருக்கின் றது.”
- சனவரி 01, புத்தாண்டு திருப்பலி மறையுரை
“அன்னை மரியா அமைதியின் அற்புதமான பேராலயமாகத் திகழ்கிறார். அவரைப் போலவே நம் அன்னையர்களும், அவர்களின் மறைவான கவனிப்பு மற்றும் அக்கறையினால் அமைதியின் அற்புதமான பேராலயங்களாகத் திகழ்கின்றனர்.”
- சனவரி 01, புத்தாண்டு சிறப்பு மூவேளை செபவுரை
“நம் உலகில் ஒன்றுமறியா எத்தனையோ குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள்! அவர்களின் அன்னையர்களின் வயிற்றில் விரக்தியில் வளர்கிறார்கள். போரினால் குழந்தைப் பருவம் சிதைந்து போன அனைத்துக் குழந்தைகளின் வாழ்க்கையிலும் இது தொடர்கிறது. இவ்வகைக் குழந்தைகள் தாம் இன்றைய குட்டி இயேசுக்கள்!”
- டிசம்பர் 28, மாசில்லாக் குழந்தைகள் விழாக்கான செய்தி
Comment